மருத்துவகுணம் குண்ட பிரண்டைச் செடியை வேலிக்கு மட்டும் பயன்படுத்திறோம் என்று எண்ணி அக்கம்பக்கத்தில் உள்ள வயதானவர்களிடமும் இதனைப் பற்றி கேட்டேன்.
அப்புறம்தான் பிரண்டை இவ்வளவு மருத்துவ குணம் கொண்டது எனவும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் பன்மடங்கு விலை கொடுத்து வாங்கி உண்கிறார்கள் என்பதனை கேள்விப்பட்டேன்.
இனி பிரண்டையைப் பற்றி காண்போம்.
சங்க இலக்கியத்தில் பேசப்படாத ஒரு தாவரம் என்றால் அது பிரண்டை
தான். பிரண்டைக்கொடி மூணு இஞ்ச் நீளம், ஒரு கணு, அதில் இருமருங்கும்
இலைகள், இலைகள் புறப்படும் இடத்திலிருந்து கொடிவீசும் சல்லி வேர்கள் என
நீண்டு நீண்டு போகும்.
சின்னப் பூவாய் வெள்ளையாயப் பூக்கும். சிறு
கறிவேப்பிலைக் காய் தரத்தில் காய்த்துக் கறுப்பாக பழுக்கும். கொடியின்
மூட்டில் கரும்பச்சை நிறமாகவும் தும்புப் பகுதியில் வெளிர் பச்சை
நிறமாகவும் இருக்கும். பிரண்டையில் பலவகை உண்டு. பிரண்டை, களிப்பிரண்டை,
தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என நான்கு இனங்கள் உள்ளதாக பதார்த்த குண
சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்று போட்ட பசுமாடு அல்லது எருமை
கன்றுக் குட்டி ஈணி, எலுங்கொடி விழாவிட்டால் தொங்கிக்கிடக்கும்
எலுங்கொடியில் பாரமாகப் பிரண்டைக்கொடி சேர்த்து வைத்துக் கட்டுவார்கள்.
பிள்ளையில்லாதவர்களைப் பார்த்து பிள்ளை இல்லேண்ணா பெரண்டைக்கொடியை அடி
வயத்திலே கெட்டிக்கிட்டுப்படு என பழமொழி சொல்வதுண்டு.
பண்டைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பிஞ்சுப்பிரண்டைகளை
நீக்கி, கணுக்களை நறுக்கி எறிந்துவிட்டு கொவரப்போட்டு வைத்திருந்த
புழுங்கலரிசி, பிரண்டை, உப்புப்பரல், ஓமம், மிளகாய் வத்தல் விதைகள் எல்லாம்
சேர்ந்து ஆட்டு உரலில் போட்டு ஆட்டி, அமர்ந்த தீயில் கூழாகக் காய்ச்சி,
அடி பிடிக்காமல் கிண்டி இறக்கி ஆறி இறுகிப்போகுமுன் துணியில் எடுத்து
உலர்த்தி விடுவார்கள். இப்படியே மூன்று அல்லது நான்கு நாள் காயவைத்து
பிரண்டை வத்தல் போடுவார்கள்.
வச்சிரவல்லி என்னும் பிரண்டை மூலிகை மிக மிக
அற்புதமான ஒன்று. பிரண்டையானது கொடியினத்தைச்சேர்ந்தது. இதன் பூக்கள் சிறு
இதழ்களுடன் கொத்துக் கொத்தாகப் பூக்கும். காய்கள் சிறிய வட்டவடிவில்
குண்டுகுண்டாக இருக்கும். பழம் சிவந்து இருக்கும். பிரண்டை, வேலி
ஓரங்களிலும் மலை அடிவாரம், புதர் மண்டிய இடங்களிலும் படர்ந்து வளரும்.
இலைகள் வட்ட வடிவில் இருக்கும்.
பிரண்டையில் நான்கு பட்டையுடைய சதுரப் பிரண்டையே,
பெரும்பாலும் எங்கும் வளர்ந்து காணப்படும். இது தவிர முப்பிரண்டை,
ஓலைபிரண்டை, கணிப்பிரண்டை, உருளைப் பிரண்டை புளிப்பிரண்டை. போன்ற பல
பிரண்டை இனங்கள் உள்ளன. பிரண்டையின் அடிப்படை மருத்துவ குணங்கள் 70 சதவீதம்
எல்லா பிரண்டை வகைக்கும் உண்டு.
இதனோடு அப்பிரண்டையின் புளிப்பு சுவைக்கேற்ப புளிப்பிரண்டை
லேசான தீஞ்சைவக்கேற்ப தீம்பிரண்டை என அப்பிரண்டையின் காரணத்தை ஒட்டிப்
பெயர் பெற்றுள்ளன. மூன்று பட்டையுள்ள முப்பிரண்டை அரிய பிரண்டையாகும். இதனை
காயகற்ப மூலிகை என அழைப்பர். இதனைச் சித்தர்கள் மருந்துடன் பயன்படுத்தி
காயசித்தி அடைந்தார்கள்.
சாதாரண பிரண்டையை நெய்யில் வறுத்து உண்டால் மூலத்தினவு, மூல
ரத்தம், மாந்தம், வயிறு, வாய்பு, அதிசாரம், கபம், இரத்தப்போக்கு, ஓய்ந்த
நடை ஆகியவை போகும்.
களிப்பிரண்டையால் ஐயம், பித்தம், கரப்பான், சிலந்திக்கடியும் போகும்.
தீம்பிரண்டையால் செரியா மந்தம், சீதக்கட்டு, இரைப்பு வீக்கம், விக்கல் ஐயம் வாதமும் போகும்.
புளிப்பிரண்டையால் பாண்டு, மார்பு நோய், குன்மம், கபமும் போகும். சூடு உண்டாகும்.
பிரண்டைத் துவையல்
பிரண்டையின் நுனியில் வளர்ந்து வரும் மெல்லிய தண்டுகளைப்
பறித்து, கழுவிக்கொள்ளவும், கடாயில் பசு நெய்யை லேசாக உள்விட்டு நன்றாக
வதக்கிக் கொள்ளவேண்டும். பிறகு உப்பு, புளி சேர்த்துத் துவையல் செய்து
சாப்பாட்டில் பிசைந்தோ அல்லது தொட்டுக்கொண்டே உண்ணலாம். இதனால் நாவில்
ஏற்படும் சுவையின்மை நீக்கி, நன்கு பசியெடுக்கும். வயிறு இரைத்தல்,
விக்கல், கொட்டாவி அவ்வப்போது விடுதல், உடல் வெளுப்பு, வயிற்று வலி, நெஞ்சக
நோய்கள் போன்றவை தீரும்.
பிரண்டையை நெய்விட்டு வதக்கி அதனை நன்கு மசிய அரைத்து 48
நாட்கள் வெறும் வயிற்றில் சிறிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு
வர மலம் போகின்ற ஆசன வாய் எரிச்சலும், இரத்த மூலமும் தீரும். பிரண்டையை
எரித்து அதன் சாம்பலை தண்ணீரில் கரைக்கவேண்டும். பிறகு தெளிவினை இறுத்து
மீண்டும் எரித்தால் பாத்திரத்தில் உப்பு தங்கும். இதுவே பிரண்டை உப்பு
ஆகும். இந்த பிரண்டை உப்பு எண்ணற்ற மருத்துவ குணம் கொண்டது.
பிரண்டை உப்பை மிளகளவு வெண்ணெய்யில் கலந்து காலை நேரத்தில்
உண்பதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்கில் ஏற்படும் பித்த வெடிப்பு,
உதட்டு வெடிப்பு இவை குணமாகும். மேலும் பிரண்டை உப்பை மிளகளவு பாலில்
கலந்து சிறு குழந்தையின் உடல் எடைக்குத் தகந்தபடி தர வாந்தி, சீதபேதி
நுரையுடன் கூடிய பச்சையாக மலம் போவது, பசியற்று இருப்பது போன்ற நோய்களைத்
தீர்க்கும் இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை மதிக்காமல் நிலத்தடி
நீரை உறிஞ்சும் வேலி காத்தானை பராமரித்து வருகிறோம்.
அதே வேளையில் மருத்துவ
குணம் கொண்ட பிரண்டையை முள்ளோடு முள்ளாகப் பார்த்து வருகிறோம். இனிமேலாவது
பிரண்டையின் குணத்தையும், மருத்துவப் பயனையும் அறிந்து உணவோடு பிரண்டை
உண்போம்.
0 comments:
Post a Comment