Wednesday, 2 September 2020

அதிக முகப்பருக்களைக் கொண்ட ஆண்களுக்கான சில ஷேவிங் டிப்ஸ்...! Beauty Skin care / Shaving Tips for Men to shave with acne

 அதிக முகப்பருக்களைக் கொண்ட ஆண்களுக்கான சில ஷேவிங் டிப்ஸ்...!
Beauty Skin care / Shaving Tips for Men to shave with acne

ஆண்கள் பொதுவாக பருக்கள் வருவது பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் ஷேவ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது மட்டும் பருக்கள் மீது அவர்களுக்கு கோபம் உண்டாகலாம். பருக்கள் உள்ள இடத்தில் ஷேவ் செய்வது என்பது ஒரு கடினமான காரியம். தப்பித்தவறி பருக்கள் மீது ப்ளேடு பட்டுவிட்டால் பருக்கள் உடைய நேரலாம். இதனால் உண்டாகும் வலி தாங்க முடியாதது.


பருக்கள் அதிகம் உள்ள ஆண்கள் ஷேவ் செய்யும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு மென்மையான முறையில் ஷேவ் செய்யும் குறிப்புகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்



ஷேவ் செய்வதற்கு முன்... ஷேவ் செய்வதற்கு முன் வெதுவெதுப்பான மற்றும் ஈரமான டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்க வேண்டும். அல்லது, ஷேவ் செய்வதற்கு முன்னதாக முகத்திற்கு நீராவி குளியல் எடுக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நீர் வெதுவெதுப்பாக மட்டுமே இருக்க வேண்டும். சூடாக இருக்கக் கூடாது. சூடான நீர் பருக்கள் உள்ள முகத்தில் மேலும் எரிச்சலை உண்டாக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் உங்கள் முகம் ஷேவ் செய்ய தயார் நிலையில் இருக்கும், முகத்தில் இருக்கும் முடிகள் மென்மையாகி ஷேவ் செய்ய எளிதாக இருக்கும். இப்படி செய்வதால் பருக்களின் இடையூறு குறைந்து ரேசர் பிளேடின் கடினத்தன்மை சற்று குறைந்த உணர்வு உண்டாகும்.


முகத்தை சரியான முறையில் சுத்தப்படுத்தவும் ஷேவ் செய்ய உகந்த நிலைக்கு முகத்தை தயார் செய்த பின்னர், பருக்களை கட்டுப்படுத்தும் க்ளென்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்தவும். பென்சாயில் பெராக்ஸைடு அல்லது சாலிசிலிக் அமிலம் போன்ற மூலப்பொருட்கள் பருக்களை சிறந்த வகையில் கட்டுப்படுத்தும். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட க்ளென்சர் பயன்படுத்தவும் அல்லது தோல் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்கள் சரும நிலைக்கு ஏற்ற சரியான பொருளை பயன்படுத்தலாம்.


மலிவான ரேசர் பயன்பாட்டைத் தவிர்க்கவும் நீங்கள் அடிக்கடி ஷேவ் செய்பவர் என்றால் சற்று விலை அதிகமானாலும் தரமான ரேசர் வாங்கி பயன்படுத்தவும். மலிவான ரேசரை விட சற்று விலை அதிகமான ரேசரை ஒரு முறை வாங்கினாலும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். இதன் பிளேடுகள் மிகவும் கூர்மையாக இருப்பதில்லை. மேலும் எந்த ஒரு வெட்டும் இல்லாமல் ஷேவ் செய்ய முடியும். ட்ரிம்மர் அல்லது மின்சார ரேசர் பயன்படுத்தி ஷேவ் செய்வதை தவிர்க்கவும். குறிப்பாக பருக்கள் இருக்கும் போது இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்களும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.


ஷேவ் செய்வதற்கு முன்னர் பிளேடுகளை சுத்தம் செய்யவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் உங்கள் சருமத்தில் பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை ஆன்டிசெப்டிக் திரவத்தில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இதனால் அவற்றில் படிந்துள்ள கிருமிகள் கொல்லப்படலாம். இந்த கிருமிகள் பருக்களில் படிந்து மேலும் அவற்றை மோசமாக மாற்றக்கூடும். இன்னும் அதிக பாதுகாப்பிற்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை வாங்கி பயன்படுத்தலாம்.


மாய்ஸ்சுரைசர் உள்ள ஷேவிங் க்ரீம் பயன்படுத்தலாம் வழக்கமான, விலை அதிகம் இல்லாத ஷேவிங் பொருட்களில் ஆல்கஹால் மற்றும் கரும்புள்ளிகளை உண்டாக்கும் கூறுகள் உள்ளன. இவை சருமத்தின் துளைகளை அடைத்து, அவற்றை வறட்சியாக்குகின்றன. பருக்கள் உள்ள சருமத்திற்கு இவை ஏற்றதல்ல. இவற்றால் எண்ணெய் பசை உற்பத்தி அதிகரித்து பருக்கள் உடைய நேரலாம். மாய்ஸ்சுரைசர் தன்மை கொண்ட ஷேவிங் க்ரீமை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இந்த க்ரீமை முகத்தில் தடவிய உடன் ஷேவ் செய்ய வேண்டாம். சில நிமிடங்கள் கழித்து ஷேவ் செய்யத் தொடங்குங்கள். இதனால் உங்கள் முகத்தில் உள்ள முடிகள் மென்மையாகி எளிதாக ஷேவ் செய்ய முடியும்.


முடி வளரும் திசையில் ஷேவ் செய்யுங்கள் முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் ஷேவ் செய்வதால் எளிதாகவும் மென்மையாகவும் ஷேவ் செய்ய முடியும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் இது உண்மையில்லை. முடி வளரும் திசையில் மட்டுமே ஷேவ் செய்ய வேண்டும் . எதிர் திசையில் ஷேவ் செய்வதால் முடி உள்ளுக்குள் வளர்ந்து ஏற்கனவே இருக்கும் பருக்களை மேலும் மோசமாக மாற்றும். ஷேவ் செய்யும் போது வெட்டு அல்லது பருக்கள் உடைந்தால் உடனடியாக கிருமி எதிர்ப்பு திரவத்தை ஒரு பஞ்சில் ஊற்றி காயம் அடைந்த பகுதியை சுத்தம் செய்யவும். இதனால் அந்த இடத்தில் உள்ள கிருமிகள் மறையும். அதோடு கிருமிகள் வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டு மேலும் பருக்கள் தோன்றாமல் இருக்கும்.


ஷேவ் செய்த பின் பயன்படுத்தும் லோஷனுக்கு மாற்றாக மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம் 

ஷேவிங் செய்த பின் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர் ஆகிய இரண்டும் ஒரே பணியை செய்கின்றன. இதன் ஒரே வேறுபாடு என்னவென்றால், ஷேவ் செய்த பின் பயன்படுத்தும் லோஷன் சருமத்தை எரிச்சலடைய வைக்கிறது, மாய்ஸ்சுரைசர் அப்படி செய்வதில்லை. மாறாக சருமத்திற்கு நீர்ச்சத்தை தருகிறது. இதனால் சருமம் மென்மையாகி, பருக்கள் உண்டாவதை தடுக்கிறது. மேலும் எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது மேலும் நன்மை தரும். சென்சிடிவ் சருமம் உள்ள ஆண்கள் தினமும் ஷேவ் செய்வதால் சருமம் சற்று கடினமாகிறது. ஆகவே சருமத்தை மேலும் கடினமாக மாற்றாமல் சிறந்த ஷேவிங் பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் உங்கள் சரும நிலைக்கு ஏற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். இருந்தும் பருக்கள் அதிகரித்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேளுங்கள்.


0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate